மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாக வளர வேண்டும் உதவி கலெக்டர் பேச்சு

மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாக வளர வேண்டும் என்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி கூறினார்.

Update: 2019-05-30 23:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு முகாம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் ஸ்போக்கன் இங்கிலிஷ், அடிப்படை தமிழ், ஓவியம் வரைதல், நன்மதிப்பூட்டும் நற்சிந்தனைகள் அடங்கிய கதை சொல்லுதல், இசை, பாட்டு, நடனம், சதுரங்கம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவைகளை சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறை சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, டாக்டர் விஜயபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் த.கிருஷ்ணன் வரவேற்றார். வாசகர் வட்டதலைவர் வாசுதேவன், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் எம்.ராஜசேகர், மூன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கபிலன், சித்தார்த்தன், பாலகிருபாகரன், அருள்மணி,தியோபிளாஸ் ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி கலந்துகொண்டு பேசுகையில், ‘மாணவர்கள் நூலகத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். சிறந்த சிந்தனையாளர்களாக வளர வேண்டும். மரங்களை நட்டு பூமியை காப்பாற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முடிவில் த.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விழாவுக்கான ஏற்பாட்டினை நூலகர் சாயிராம் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்