தம்பதியை தாக்கி நகை–பணம் கொள்ளை கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் சிக்கியது

திருவட்டார் அருகே தம்பதியை தாக்கி நகை– பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.

Update: 2019-05-30 23:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 65). இவருடைய மனைவி ஜெபஷீபா புளோரா (60).  சம்பவத்தன்று கணவன்–மனைவி இருவரும் கல்லங்குழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். செறுகோல் அருகே அவர்கள் வந்தபோது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து தாக்கி ஜெபஷீபா புளோரா வைத்திருந்த பையை பறித்தனர்.

 இதனால், அதிர்ச்சி அடைந்த கணவன்–மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

 மர்ம நபர்கள் பறித்து சென்ற பையில் ரூ.18 ஆயிரம் மற்றும் 1 பவுன் நெக்லஸ், 3 ஏ.டி.எம்.கார்டுகள் ஆகியவை இருந்தன.

 உடனே அவர்கள் இந்த கொள்ளை குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஏசுதாஸ், திருவட்டார் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று மர்ம நபர்கள் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து சென்றது குறித்து தகவல் தெரிவித்து கார்டுகளை முடக்கம் செய்யுமாறு கூறினார்.

அப்போது, வங்கி அதிகாரி ஏசுதாஸ் கணக்கை ஆய்வு செய்த போது, கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்றே கொள்ளையர்கள் அழகியமண்டபம் பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.5 ஆயிரமும், தக்கலை பனவிளை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.2 ஆயிரத்து 500–ம் எடுத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்தும் ஏசுதாஸ் திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் தக்கலை பனவிளை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 3 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அவர்கள் கல்லூரி மாணவர்கள் போல் இருப்பதால், குமரி மாவட்டத்தில் தங்கியிருந்து கல்லூரியில் படிக்கும் கேரள மாணவர்களாக இருக்குமோ? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்