வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிபோதையில் சமையல்காரரை சரமாரியாக வெட்டிய ஊழியர்கள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிபோதையில் சமையல்காரரை சரமாரியாக வெட்டிய ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வண்டலூர்,
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் பூங்காவில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில் பெயிண்ட் அடிக்கும் பணி இரவு நடந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 21) என்பவர் இந்த ஓட்டலில் தங்கி சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டல் மேலாளர் கூறியபடி பூங்கா நுழைவுவாயில் அருகே இருந்த பெயிண்ட் டப்பாக்களை சைக்கிளில் வைத்து பூங்காவிற்குள் எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது பூங்கா ஊழியர்கள் சுரேஷ், சரவணன், பால்ராஜ் ஆகியோர் பூங்காவில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
குடிபோதையில் இருந்த 3 பேரும் சரவணனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் பூங்கா ஊழியர் சுரேஷ் பட்டா கத்தியை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்ட தொடங்கினார். உடனே சரவணன் தப்பி ஓடி ஓட்டலில் உள்ள ஒரு அறையில் பதுங்கி கொண்டார். ஆனால் சரவணனை 3 பேரும் பிடித்து கத்தியால் சரமாரியாக வெட்ட தொடங்கினார்கள். இதில் உயிருக்கு பயந்து அலறி அடித்துக்கொண்டு சரவணன் ரத்தம் வழிந்தநிலையில் பூங்காவிலிருந்து வெளியே ஓடி வந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மயங்கி கீழே விழுந்தார்.
தலை, கை, காலில் ரத்தம் வடிந்தபடி சாலை ஓரமாக கிடந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரவணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பூங்கா ஊழியர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.