சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டி இறந்தாரா? பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக கழிவுகள் அகற்றும் பணி

திருச்சியில், சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டி இறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2019-05-29 23:00 GMT
மலைக்கோட்டை,

திருச்சி கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில், காசியம்மாள்(வயது 75) வசித்து வந்தார். அவர் வீட்டின் அருகே கழிவுநீர் செல்லும் சாக்கடை வாய்க்கால் ஒன்று உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த வாய்க்கால் வழியாக தான் செல்லும். சரியான முறையில் இந்த கழிவுநீர் வாய்க்காலை பராமரிக்காததாலும், அந்த பகுதியில் உள்ள கழிவுகளை இந்த திறந்த வெளி வாய்க் காலில் கொட்டுவதாலும், சரிவர கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.

மேலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் புழுக்கள் அதிகமாக வாய்க்காலில் உள்ளதால் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மூதாட்டி காசியம்மாள், சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இறந்ததாகவும், உடனடியாக அந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தவில்லை என்றால் மூதாட்டியின் உடலை மெயின்கார்டு கேட் அருகில் உள்ள காந்தி சிலை அருகில் சாலையில் வைத்து மறியல் செய்யப்போவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இறந்த மூதாட்டி வீட்டின் அருகில் போலீசாரும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அந்த பகுதியில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு துர்நாற்றம் வீசிய கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. மேலும் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன. இறந்த மூதாட்டி காசியம்மாள் உடலை, நேற்று ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் ஓயாமரி சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் போலீசார் காசியம்மாள் உடலை ஓயாமரி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும்வரை எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்