ராகுல்காந்தி பதவி விலக எதிர்ப்பு: காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி - சேலத்தில் பரபரப்பு

ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-05-29 23:15 GMT
சேலம்,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், ராகுல்காந்தியை சிலர் சமரசம் செய்யும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ராகுல்காந்தி பதவி விலக எதிர்ப்பு தெரிவித்தும், அவர் ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற வலியுறுத்தியும் சேலத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 52). இவர், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பழனி மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே விரைந்து சென்று பழனியை தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி பச்சப்பட்டி பழனி கூறியதாவது:-

நாட்டை வழி நடத்தும் முழு தகுதியும், திறமையும் ராகுல்காந்தியிடம் உள்ளது. அவரது வழிகாட்டுதலின்படி பணியாற்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கிறோம். தற்போதைய தேர்தல் தோல்வியை காரணம் காட்டி அவரது பொறுப்பை ராஜினாமா செய்வதை ஏற்று கொள்ள முடியவில்லை. எனவே, ராகுல்காந்தி தனது ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக நான் தீக்குளிக்க முயன்றேன், என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சப்பட்டி பழனிசாமி தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்