பெண் போலீசாருக்கு விடுமுறை: போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு பாராட்டு

பெண் போலீசாருக்கு வாராந்திர விடுமுறை அளித்ததையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு பெண் போலீசார் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள். ஆண் போலீசாரும் இதுபோன்று விடுமுறை எங்களுக்கும் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2019-05-29 23:00 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் எஸ்.சக்தி கணேசன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களுக்காக இவர் செயல்படுத்திய திட்டங்களை விட தற்போது போலீசாருக்காக நிறைவேற்றும் திட்டங்களால், போலீசாரின் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே பொதுமக்கள் தரப்பில் மூத்த குடிமக்களின் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ‘ஹலோ சீனியர்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கினார். அதற்கு அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க ‘லேடீஸ் பர்ஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டங்களுக்காக அவர் அறிவித்து இருக்கும் தொலைபேசி எண்களுக்கு யாராவது புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த சம்பந்தப்பட்டவரை அந்தந்த பகுதி போலீசார் சந்தித்து விவரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த திட்டங்கள் பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுபோல் ஆம்புலன்சுகளுக்கும் வழிவிடும் எக்பிரஸ் காரிடார் திட்டமும் வெற்றிகரமாக உள்ளது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் பெண் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அமல் படுத்தி உள்ளார். கடந்த 26-ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதன் மூலம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் ஏட்டுகள் உள்பட 300 போலீசார் பயன் பெறுகிறார்கள். ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை 300 பேருக்கும் சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்தந்த வாராந்திர நாள்கள் யாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதோ, அவர்கள் அந்த நாளில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் போலீசாரும் முறையாக விடுமுறை எடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்கவும் ஒரு அதிகாரியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பெண் போலீசாரை கட்டாயப்படுத்தி விடுமுறையை ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இது பெண் போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்து வருகிறார்கள்.

விடுமுறை எடுக்கும் பெண் போலீசாரை பார்த்து தற்போது ஆண் போலீசாரும், தங்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும், எங்களுக்கும் விடுமுறை கிடைக்குமா? என்று எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்