புஞ்சைபுளியம்பட்டியில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
புஞ்சைபுளியம்பட்டியில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 29) மாணவியை கடத்திச்சென்றது தெரிய வந்தது. இவர் தச்சு தொழிலாளி. ஜெயசீலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
அதே கோவிலுக்கு மாணவியும் வந்திருந்தார். அப்போது ஜெயசீலனுக்கும், அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி வந்த ஜெயசீலன் மாணவியை திடீரென கடத்திக்கொண்டு விளவங்கோடு பகுதிக்கு சென்றார். அங்கு தனது வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விளவங்கோடு பகுதியில் உள்ள ஜெயசீலன் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை புஞ்சைபுளியம்பட்டி அழைத்து வந்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயசீலனிடம் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர்.