எட்டயபுரத்தில் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
எட்டயபுரத்தில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எட்டயபுரம்,
நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் அனல் காற்று வீசும் அளவுக்கு வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே அச்சப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை வறண்டு கிடக்கிறது. மேலும் கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளிலும் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்து விட்டது. மழை வேண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் வருண யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வழக்கம் போல் காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. பின்னர் மதியம் 2 மணி அளவில் வெயில் திடீரென குறைந்து வானில் மேகங்கள் திரண்டன. 2.20 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இது சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழையாக மாறியது.
எட்டயபுரம் மெயின் பஜார் மற்றும் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மழையின் இடையே சூறைக்காற்றும் வீசியது. சுமார் ¾ மணி நேரம் பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் எட்டயபுரம் பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.