முண்டந்துறையில் ரூ.7 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரம்

முண்டந்துறையில் ரூ.7 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-05-29 22:45 GMT
விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் வழியில் முண்டந்துறையில் சேர்வலாறு ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த பாலம் இருந்தது. கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து அதன் அருகில் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாகவே அனைத்து வாகனங்களும் காரையாறுக்கு சென்று வருகின்றன.

தொடர்ந்து முண்டந்துறையில் சேர்வலாறு ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. எனினும் சேர்வலாறு ஆற்றின் வழியாக தண்ணீர் அதிகமாக சென்றதால், அங்கு பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு, கடும் வறட்சி நிலவுவதால் சேர்வலாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இதனால் முண்டந்துறையில் பாலம் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

ஆற்றில் வரும் குறைந்த தண்ணீரையும் சாக்கு மூட்டைகளை அடுக்கி வைத்து, திருப்பி விட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாகவும், இன்னும் 3 மாதங்களில் முண்டந்துறையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்