பெங்களூருவில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளியுடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
பெங்களூருவில் காங் கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளியுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் காங் கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளியுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்கள். அவர்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதா? அல்லது பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்குவதா? என ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பா.ஜனதாவுக்கு ஆதரவு
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மேலும் பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாகவும் ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஆர்.சங்கரிடம் இருந்தும் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றார். மேலும் மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேசுடன் சேர்ந்து சமீபத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆர்.சங்கர் அறிவித்தார்.
ரமேஷ் ஜார்கிகோளியுடன் சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியால் கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை சுயேச்சை எம்.எல்.ஏ. ஆர்.சங்கர் சந்தித்து பேசியதுடன், மந்திரி பதவி வழங்கினால் மீண்டும் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், நாகேஷ் தற்போது யாருக்கும் ஆதரவு அளிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளியை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர் மற்றும் நாகேஷ் நேற்று திடீரென்று பெங்களூருவில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது ரமேஷ் ஜார்கிகோளியுடன் மகேஷ் கமடள்ளி எம்.எல்.ஏ.வும் இருந்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அப்போது ரமேஷ் ஜார்கிகோளியின் முடிவு குறித்து 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் கேட்டு அறிந்து கொண்டதாக தெரிகிறது. அதாவது ரமேஷ் ஜார்கிகோளி கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளாரா? அல்லது பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறாரா? என்பது குறித்து 2 பேரும் கேட்டதாக தெரிகிறது.
மந்திரி பதவி
அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் மகேஷ் கமடள்ளி ஆகியோருடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக யாருக்கு ஆதரவு அளித்தால் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்பது குறித்து பேசியதாக தெரிகிறது. இதற்கு ரமேஷ் ஜார்கிகோளி சில ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது. பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ், ஆர்.சங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் இருப்பதால், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கூட்டணி அரசுக்கு தேவையாக உள்ளது. அதுபோல, பா.ஜனதா ஆட்சி அமைத்தாலும் அவர்கள் 2 பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது. எனவே சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து திடீரென்று ஆலோசனை நடத்தியது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது முடிவை பொறுத்து தான் கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழுமா? இல்லை தொடர்ந்து நீடிக்குமா? என்பது தெரியவரும்.