காவிரி ேமலாண்மை ஆணையம் உத்தரவு: கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம் மந்திரி சி.எஸ்.புட்டராஜூ பேட்டி
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம் என்று மந்திரி சி.எஸ்.புட்டராஜூ கூறினார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம் என்று மந்திரி சி.எஸ்.புட்டராஜூ கூறினார்.
தண்ணீரை திறக்க வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கர்நாடகம் ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை திறக்க வேண்டும் என்று அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியும், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான சி.எஸ்.புட்டராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தண்ணீர் திறப்போம்
கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. போதிய மழை இல்லாததால், நீர்வரத்தும் இல்லை. அணைகளில் உள்ள நீர், குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால் 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டிருப்பது சரியல்ல.
உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, உண்மையை அறிந்து முடிவு எடுக்க வேண்டும். மழை பெய்து கர்நாடகத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) ஆகிய அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம். கடந்த 2018-ம் ஆண்டு அதிகளவு தண்ணீரை திறந்துவிட்டோம்.
இவ்வாறு சி.எஸ்.புட்டராஜூ கூறினார்.