பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.

Update: 2019-05-28 22:45 GMT
திருச்சி,

திருவெறும்பூர் தாலுகா வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குட்பட்ட 103 பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த பின்னர் கலெக்டர் சிவராசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:–

தகுதி சான்று ரத்து


திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 103 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் 4 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசர காலவழிகள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு 5 வருட முன்அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் உதவியாளர் நடத்துனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வேக கட்டுப்பாடு கருவி


மேலும் பள்ளி வாகனங்களில் மாதம் ஒருமுறை அவசரகால கதவு சரியான முறையில் செயல்படுகிறதா என்பதையும் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிற பெயிண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனத்தில் உள்கட்டமைப்பு வசதி பலமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் 2 பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் உள்ள படிக்கட்டுகள் குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்