தேர்தல் விதிமீறல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
தேர்தல் விதிமீறல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் எழுதியது, விதிகளை மீறி கூட்டம் நடத்தியது, உரிய ஆவணமின்றி ரொக்கப்பணம், வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு சென்றதை பறிமுதல் செய்தல் என 161 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்யப்பட்டது.
இந்த வழக்குகளின் விசாரணை, அதன் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், நீதிராஜன், விஜயகுமார், ராமநாதன், அஜய்தங்கம், மகேஷ், கனகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் மீது விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அதோடு குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.