வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி, டிராவல் ஏஜென்சி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி, 2-வது நாளாக தொழில் அதிபர்கள் போலீசில் புகார்

திருப்பூரில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி பணம் வசூலித்த டிராவல் ஏஜென்சி நிறுவனம் மீது பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக பனியன் நிறுவன உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் 2-வது நாளாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2019-05-28 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் புஷ்பா தியேட்டர் நிறுத்தம் பகுதியில் டிராவல் கிராப்ட் என்ற பெயரில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்வதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் வெளிநாடு செல்வதற்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூடப்பட்டது. அதன் உரிமையாளர்களான திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவருடைய மனைவி ரம்யா, சகோதரி மாலதி ஆகியோரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அந்த நிறுவனத்தின் மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.10 கோடிக்கு மேல் செலுத்தி ஏமாந்து விட்டதாக புகார் மனு கொடுத்துள்ளனர். பனியன் நிறுவன உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் என குடும்பத்துடனும், தனது நண்பர்களுடனும் சேர்ந்து வெளிநாடு செல்வதற்காக பணத்தை செலுத்தியுள்ளனர். துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட், தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்டவையுடன் குறைந்த தொகைக்கு அறிவிப்பு செய்ததால் தான் அதை நம்பி இந்த டிராவல் ஏஜென்சியில் பணம் கட்டியுள்ளனர்.

வெளிநாடு செல்ல திட்டமிட்ட தேதியில் இருந்து குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு முன்பாக பணத்தை காசோலையாகவோ, ரொக்கமாக நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். ஜூலை, ஆகஸ்டு முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை வெளிநாடு செல்வதற்கு இந்த நிறுவனத்தின் மூலமாக முன்பதிவு செய்து ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நெருப்பெரிச்சலை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரான கோபிநாதன்(வயது 40) கூறும்போது, நான் எனது மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரும், எனது நண்பர்களும் என மொத்தம் 11 பேர் சிங்கப்பூர் செல்வதற்கும், மேலும் 2 பேர் துபாய் செல்வதற்கும் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்தை டிராவல் கிராப்ட் நிறுவனத்தில் செலுத்தினோம். பணத்தை மாலதி என்பவர் வசூலித்தார். வருகிற ஜூலை மாதம் சிங்கப்பூர் அழைத்துச்செல்வதாக கூறியிருந்தனர். ஆனால் அதற்குள் நண்பர்கள் மூலமாக அந்த நிறுவனம் மூடப்பட்டு இருப்பதுடன் அதன் உரிமையாளர்களும் தலைமறைவானது தெரியவந்தது.

என் மூலமாக எனது நண்பர்கள் வெளிநாடு செல்வதற்காக பணம் செலுத்தினார்கள். இதனால் எனக்கு மிகவும் மனசங்கடம் ஏற்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளோம். என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். சுமார் ரூ.10 கோடிக்கு மேல் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர். பணத்தை மீட்டுக்கொடுத்தால் போதும் என்றார்.

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த எலாஸ்டிக் நிறுவன உரிமையாளரான காளிதாஸ்(50) கூறும்போது, எங்களின் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். இந்த நிறுவனத்தின் மூலமாக 3 முறை வெளிநாடு சென்று திரும்பியிருக்கிறோம். மற்ற ஏஜென்சியை விட இந்த நிறுவனத்தில் குறைந்த தொகையில் அழைத்துச்சென்றதால் எனது நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அடுத்து வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தோம்.

எனது நண்பர்களுடன் துபாய் செல்வதற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினோம். ஜூலை முதல் வாரத்தில் அழைத்துச்செல்வதாக கூறியிருந்தனர். அதற்குள் நிறுவனத்தை மூடிவிட்டு எந்த வித தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகி உள்ளனர். எங்களைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அதாவது கோவை, சேலம் பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை இந்த நிறுவனத்தில் கட்டியுள்ளனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வெளிநாடு அழைத்துச்செல்வதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த டிராவல் ஏஜென்சியால் திருப்பூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்