காவனூர் காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

காவனூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-05-28 22:30 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவனூர் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் காளியாட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான காளியாட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி சேவாப்பன், பள்ளிக்குடத்தான், ராசகோனார், சிறுகடம்பூரார், நக்கம்பாடியார், பிள்ளைகான், படையாச்சியார், வாண்டையார் ஆகிய வகையறாக்கள் சார்பில் ஒவ்வொரு தினமும் விநாயகர், மாரியம்மன், முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளியட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் காளியம்மன் வேடத் திற்கு தேவைான அலங்கார பொருட்களுடன் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் அருகிலுள்ள ஏரிக்கரைக்கு எடுத்துச் சென்றனர்.

காளியாட்டம்

இதனை தொடர்ந்து பக்தர்கள் காளி வேடம் அணிந்து மேளதாளத்துடன் ஏரிக்கரையில் இருந்து புறப்பட்டு காளி ஆட்டத்துடன் ஊரைச்சுற்றி கோவில் வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மன், காளியம்மன், விநாயகர் உள்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. அதன்பின்னர் சாமிகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்