நீலகிரி அங்கன்வாடி மையங்களில், வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் - 8-ந் தேதி வரை நடக்கிறது

நீலகிரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2019-05-28 21:30 GMT
ஊட்டி,

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊட்டி லோயர் பஜாரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உப்பு கரைசலை(ஓ.ஆர்.எஸ்.) வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய சுகாதார கொள்கையின் நோக்கம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 2016-ம் ஆண்டில் 39-ஆக இருந்ததை வருகிற 2025-ம் ஆண்டில் 23 ஆக குறைப்பது ஆகும். தமிழ்நாட்டில் தற்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 19 ஆக உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் ஆயிரம் பிறப்புகளுக்கு 10 ஆக இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் நிமோனியாவிற்கு அடுத்தப்படியாக 10 சதவீதம் வயிற்றுப்போக்கினால் ஏற்படுகிறது.

நாட்டில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கினால் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தாய்மார்கள், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் வயிற்றுப்போக்கு தடுத்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இருவார கால விழிப்புணர்வு முகாம் தொடங்கி உள்ளது. இந்த முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் இன்று (நேற்று) முதல் வருகிற 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரியில் மொத்தம் 41 ஆயிரத்து 730 குழந்தைகள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்