இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கைதான போலி சாமியாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி சாமியாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திண்டிவனம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி என்கிற செல்வமணி(வயது 40). போலி சாமியாரான இவர் திருமணமாகி, மனைவியை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியேறினார். அவருடன் இருந்த மதுரையை சேர்ந்த ஹேமா என்ற திருமணமான பெண்ணை தனது மனைவி என்றும், அவர் ஆசிரியை என்றும் கிராம மக்களிடம் அறிமுகப்படுத்தினார். இதனால் அதே கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஹேமாவிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.
மேலும் மணி எப்போதும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்து தனது இருசக்கர வாகனத்தில் செல்வார். மேலும் அவர் தான் ஒரு கொத்தனார் எனவும், வெளியூரில் கட்டிட தொழில் செய்து வருவதாகவும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதாக கூறி, கையில் கயிறு கட்டி மது பழக்கத்தில் இருந்து மீட்பதாகவும் கூறி வந்தார்.
இதனிடையே மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் இருக்கும் புகைப்படத்தினை காண்பித்து தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்வதாகவும், பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறியதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு நபரிடமிருந்து வந்த செல்போன் அழைப்பின் மூலம், அவரது 19 வயது மகளை தன்வசப்படுத்தி கற்பழித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி விழுப்புரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையை மணி சீரழித்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான போலி சாமியார் மணி மீது ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட வேறு யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. இருப்பினும் மணியை கோர்ட்டு உத்தரவின்பேரில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே, அவர் போலி சாமியார் என கூறி எத்தனை பெண்களை தன்வசப்படுத்தி சீரழித்துள்ளார் என்ற உண்மை தெரியவரும் என்றனர்.