கடையநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை சாவு

கடையநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை இறந்தது.

Update: 2019-05-28 21:45 GMT
கடையநல்லூர், 

கடையநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை இறந்தது.

யானைக்கூட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாத வகையில், சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் தற்போது கோடை வெயிலால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், குடிநீர் மற்றும் உணவைத்தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.

மேல கடையநல்லூர் அருகே முந்தல்காடு பகுதியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தோப்பின் வெளிப்பகுதி வழியாக வாய்க்கால் செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த யானைக்கூட்டம், வாய்க்கால் வழியாக மாந்தோப்புக்குள் புகுந்து செல்ல முயன்றது.

மின்வேலியில் சிக்கி சாவு

அப்போது மின்வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதால் பெரும்பாலான யானைகள் திரும்பின. அப்போது அந்த யானைக்கூட்டத்தில் இருந்த ஒரு வயதான ஆண் யானை, வாய்க்காலில் வழுக்கி விழுந்தது. மேலும் அது மின்வேலி சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்ற யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி சென்று விட்டன.

நேற்று காலையில் அந்த வழியாக சென்ற விவசாயிகள், மின்வேலியில் சிக்கி யானை இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள், இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த யானையை வனப்பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

மேலும் செய்திகள்