திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

Update: 2019-05-28 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் படியும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரிலும், தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமருகல் அருகே மருங்கூரில் நாகை தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில சாராயம் இருந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

7 பேர் கைது

விசாரணையில் அவர்கள், சங்கமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் தர்மராஜ் (வயது 22), முத்து மகன் விஷால் (19), குற்றாம்புரிந்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனபால் (51), கீழ்வேளூர் கார்தாகுடி பகுதியை சேர்ந்த ராஜமுருகன் மகன் கிருஷ்ணராஜ் (20), சீயாத்தமங்கை பெரிய தெருவை சேர்ந்த மதியழகன் மகன் விக்னேஷ் (23), 17 மற்றும் 18 வயதான 2 சிறுவர்கள் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்