நகைக்கடை காவலாளி சாவு: விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கைது

விபத்தில் நகைக்கடை காவலாளி இறந்த வழக்கில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-28 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 55). இவர் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 25–ந் தேதி இரவு ராஜலிங்கமும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணனும் (40) நகைக்கடையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் கடையின் முன்பு இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இருந்தனர்.

அப்போது ஈரோடு கந்தசாமி 2–வது வீதியில் இருந்து ஆர்.கே.வி. ரோட்டை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த கார் நகைக்கடை முன்பு அமர்ந்திருந்த ராஜலிங்கம், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது மோதியது. பின்னர் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி ராம்நகரை சேர்ந்த சின்னுசாமியின் மகன் ராகுல் (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியதாக ராகுலை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்