மாணவியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம்: காதலனின் நண்பன் குண்டர் சட்டத்தில் கைது

கல்லூரி மாணவியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காதலனின் நண்பன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-28 22:15 GMT
நாகர்கோவில்,

அஞ்சுகிராமம் அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ஏசு நேசன் (வயது 36), மாற்றுத்திறனாளி. இவருக்கும் 17 வயதுடைய ஒரு கல்லூரி மாணவிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று ஏசு நேசன், தனது நண்பர் ஆதிசுடன் ஒரு காரில் மாணவியை சந்திக்க சென்றார். காரில் ஏசு நேசனுடன் மற்றொருவர் இருப்பதை கண்ட மாணவி காரில் ஏற தயங்கினார். ஆனால், இருவரும் சேர்ந்து மாணவியை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர், இருவரும் மாணவியை மீண்டும் வடசேரியில் இறக்கி விட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பற்றி மாணவி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுநேசன் மற்றும் ஆதிஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கைதான ஆதிஷ் மீது நாகர்கோவில் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதனால், ஆதிசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், ஆதிசை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்