கோத்தகிரி அருகே, சுற்றுலா பயணிகளை கவரும் ஜான் சல்லீவன் நினைவகம்

கோத்தகிரி அருகே உள்ள ஜான் சல்லீவன் நினைவகம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

Update: 2019-05-27 22:30 GMT
கோத்தகிரி,

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக கடந்த 1815-ம் ஆண்டு முதல் 1830-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஜான் சல்லீவன். ஆரம்பத்தில் இவர் கோவையில் கலெக்டராக பணியாற்றியபோது, அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக கோத்தகிரி திம்பட்டி பகுதிக்கு வந்தார். அப்போது அவருடன் வந்த பலர் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி பலியானார்கள். இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத ஜான் சல்லீவன், திம்பட்டியில் வசித்த தோடர் இன மக்களிடம் இருந்து கன்னேரிமுக்கு பகுதியில் நிலம் வாங்கி பங்களா ஒன்றை கட்டினார். இது பெத்தக்கல் பங்களா என்று அழைக்கப்பட்டது. இதனை தங்கும் இடமாகவும், கலெக்டர் அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தி வந்தார். பின்னர் 1825-ம் ஆண்டில் ஊட்டி நகரை நிர்மாணித்து, அங்கு ஏரியையும் உருவாக்கினார். ஊட்டியில் 1841-ம் ஆண்டு வரை அவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் சல்லீவன் கலெக்டர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த பங்களா, தற்போது அவரது நினைவகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டு களிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பழைய புகைப்படங்கள், ஆதிவாசி மக்களின் உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் புகைப்படங்கள், ஜான் சல்லீவன் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் புகைப்படங்கள் ஆகியவை அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நீலகிரியின் பெருமைகளை விளக்கும் நூல்களை கொண்ட நூலகமும் செயல்பட்டு வருகிறது. நினைவகத்துக்கு வெளியே ஜான் சல்லீவனின் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஜான் சல்லீவன் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான 4½ ஏக்கர் நிலத்தில் ரூ.88 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குறித்தும், இங்கு வசிக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் அறிந்து கொள்ள முயலும் சுற்றுலா பயணிகளை ஜான் சல்லீவன் நினைவகம் கவர்ந்து வருகிறது. இங்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் நினைவகத்தை பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர்.

மேலும் செய்திகள்