சொத்துவரி புத்தகம் கொடுக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையாளர் உள்பட 2 பேர் கைது
கோவையில் சொத்துவரி புத்தகம் கொடுக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 32), இவர் நல்லாம் பாளையத்தில் புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு சொத்துவரி செலுத்த சொத்துவரி புத்தகம் கேட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தார்.
அவர் பலமுறை அங்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் எதுவுமே செய்ய முடியாது என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
இதனால் அவர், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமாரிடம் (57) சென்று சொத்துவரி புத்தகம்கேட்டார். அதற்கு அவர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக சொத்துவரி புத்தகத்தை கொடுப்பதாக கூறினார்.
அதற்கு குமார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். உடனே அங்கு இருந்த இடைத்தரகரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (59) என்பவர் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து லஞ்சம் கொடுப்பதாக குமார் கூறினார்.
பிறகு ரவிக்குமாரை சந்தித்த குமார், தன்னிடம் ரூ.15 ஆயிரம் இல்லை, ரூ.12 ஆயிரம் மட்டுமே இருக்கிறது. அதை கொடுக்கிறேன் என்று கூறினார். அந்த பணத்தை வாங்கவும் ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் கொடுத்து, உதவி ஆணையாளர் ரவிக்குமாரிடம் கொடுக்குமாறு கூறினார்கள்.
அதன்படி குமார் நேற்று காலையில் கோவை வடக்கு மண்டல அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையாளர் ரவிக்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அதற்கு அவர் இடைத்தரகரான பாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுக்க சொன்னார். உடனே அவர் பாலகிருஷ்ணனிடம் ரூ.12 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், உதவி ஆணையாளர் ரவிக்குமார் சொல்லிதான் பணத்தை குமாரிடம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.
உடனே போலீசார் ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சொத்துவரி புத்தகம் கொடுக்க குமாரிடம் லஞ்சம் கேட்டதையும், அவர் பணத்தை கொடுத்தபோது அதை பாலகிருஷ்ணனிடம் கொடுக்க சொல்லியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து உதவி ஆணையாளர் ரவிக்குமார் மற்றும் இடைத்தரகர் பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் வடக்கு மண்டலம் மற்றும் ரவிக்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். அங்கு சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.