சிவகிரி பகுதியில் மணல் கடத்திய 2 பேர் சிக்கினர்; லாரிகள் பறிமுதல்
சிவகிரி பகுதியில் மணல் கடத்திய 2 பேர் சிக்கினர். லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகிரி,
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலை அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தபோது, அந்த லாரியில் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, லாரியில் மணல் கடத்தி வந்த கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் கார்த்திக்குமார் என்பவரை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அங்குள்ள சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரகேரளம்புதூர் அருகே உள்ள சோலைசேரி வடக்குதெருவை சேர்ந்த தங்கசாமி (வயது 42) என்பவர் ஓட்டி வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது, அனுமதியில்லாமல் லாரியில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் தங்கசாமியை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.