பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம்

மழையின்மை மற்றும் கொளுத்தும் வெயிலால் பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது. இதனால் தண்ணீர் சூடாகி போவதால் அதில் உள்ள மீன்கள் பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

Update: 2019-05-27 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும் கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது.

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது. கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

அதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 47.31 அடியாக உள்ளது.

மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.48 அடியாக உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்