மத்திய அரசு, புதுவை மாநிலத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் தடுத்து நிறுத்துவோம் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
மத்திய அரசு புதுவை மாநிலத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நேருவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திரத்திற்காக போராடியவர் நேரு. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நேருவின் கையில் நாடு இருந்தால் தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை நேருவிடம் ஒப்படைத்தார். அவர் நாட்டின் முதல் பிரதமராகிய பின்னர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வேட்பாளர் இல்லை. எதிரணியில் உள்ள அ.தி.மு.க., என்.ஆர்.காங்., பா.ஜ.க. கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றெல்லாம் ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டனர். அதனை பொருட்படுத்தாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று பணியாற்றினோம்.
சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டார். கட்சி சார்பில் மற்றொரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சி தலைமைக்கு வைத்திலிங்கம் தனது விருப்பத்தை தெரிவித்து தேர்தலில் போட்டியிட்டார். அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேலும் 29 தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் 2 சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இந்த வெற்றிக்கு கவர்னர் மாளிகை முன்பு 6 நாட்கள் போராட்டம் நடத்தியது, அந்த போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம் தான். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். இந்த வெற்றியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மீதம் உள்ள காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் உள்ளது. இதனை நன்றிக்கடனாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
மோடி 2–வது முறையாக பிரதமராகி உள்ளார். அவர் தனது உரையில் மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமர் மோடியை சந்தித்து புதுச்சேரிக்குரிய திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் கேட்டு வலியுறுத்துவோம்.
புதுவை, காரைக்கால் பகுதியில் எரிவாயு ஆராய்ச்சி மேற்கொள்ள (ஹைட்ரோகார்பன் திட்டம்) வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளதாக கூறுகின்றனர். புதுச்சேரி மாநில அரசு எந்த விதமான அனுமதியும் தரவில்லை. மாநில அரசின் அனுமதியின்றி ஆராய்ச்சி எதையும் செய்ய முடியாது. எங்கள் அனுமதியின்றி பணிகளை தொடங்கினால் அதனை தடுத்து நிறுத்துவோம். மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நலனிற்காக கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவு அளித்து, ஒத்துழைப்போம். எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.