அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கு மக்கள் துணைபோகக்கூடாது - அன்பழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கு மக்கள் துணைபோகக்கூடாது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-05-27 00:15 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மக்கள் மதச்சார்பின்மையில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் இந்த தேர்தலில் மத ரீதியில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து அந்த சூழ்ச்சியின் மூலம் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் என்பது மதம் சார்ந்ததல்ல. அரசியல் சார்ந்தது என்பதை அனைவரும் உணரவேண்டும். மக்கள் அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கு துணைபோகக்கூடாது. அது அவர்களது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வினை காங்கிரஸ் அரசு பரிசாக அளித்துள்ளது. இதுசம்பந்தமாக கருத்துகேட்பு கூட்டத்தில் கூட மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர். ஆனால் புதுவை அரசின் பரிந்துரையை ஏற்று இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் மின் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளது.

இது அரசின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது. மின்கட்டணம் 4.59 சதவீதம் ஏற்றப்பட்டுள்ளது. இது ஏழை, நடுத்தர பிரிவினருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். தேர்தல் முடிந்த 2 நாட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சட்ட விரோதமானது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடியைத்தான் குற்றம் சாட்டுவார்.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு புதுவை மக்கள் மதிப்பு அளிக்கவில்லை. எனவே மின் கட்டண உயர்வுக்காக போராட்டம் நடத்தமாட்டோம். மக்களிடம் விழிப்புணர்வு தேவை. மக்களாக போராட்டம் நடத்தி எங்களை கூப்பிட்டால் நாங்கள் போவோம். இப்போது அரசாங்கம் கொடுத்துள்ள மின் கட்டண உயர்வு என்ற பரிசை மக்கள் பெற்றுத்தான் ஆகவேண்டும்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். நடந்து முடிந்த தேர்தலில் சில மத போதகர்கள் பிரசாரத்தை மேற்கொண்டனர். சிறுபான்மை மக்களை அவர்கள் தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது ஆரோக்கியமானதல்ல.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்