தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கி இருக்கும் புலி; பொதுமக்கள் பீதி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் பதுங்கி இருக்கும் புலியால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2019-05-26 23:27 GMT
தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச்சரகம் ஜீர்ஹள்ளி. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியையொட்டி உள்ள சிமிட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 42). மூர்த்தி (47). 2 பேரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் எதுவும் பயிர் செய்யப்படவில்லை. ஆங்காங்கே முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் ராஜாவும், மூர்த்தியும் தங்களுடைய தோட்டங்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது தோட்டத்தில் புலியின் கால் தடம் பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டனர். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்துவிட்டு பின்னர் வனப்பகுதிக்குள் சென்றிருக்கும் என நினைத்தபடி தோட்டத்தை சுற்றிப்பார்க்க தொடங்கினர். அப்போது ராஜாவின் தோட்டத்தில் உள்ள ஒரு புதரில் இருந்து புலியின் உறுமல் சத்தம் கேட்டது.

சத்தத்தை கேட்டதும் அவர்கள் திகைத்து நின்றனர். பின்னர் அவர்கள் சத்தம் வந்த பகுதியில் இருந்த புதரை உற்று நோக்கினர். அப்போது புலி ஒன்று புதருக்குள் மறைந்திருந்ததை கண்டதும் அவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. பயத்தில் குலைநடுங்கியது. இங்கிருந்து தப்பி ஓடினால், புலி துரத்தி வந்து நம்மை தாக்கி கொன்றுவிடும் என அவர்கள் பயந்தனர். எனவே அவர்கள் 2 பேரும் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, நைசாக அருகில் இருந்த புதருக்குள் மறைந்து நின்று புலியின் நடவடிக்கையை பார்க்க தொடங்கினர்.

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த செல்போன் மூலம் கிராமத்தில் உள்ளவர்களுக்கும், அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் இதுபற்றி ஜீர்ஹள்ளி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் மலைக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ராஜாவின் தோட்டத்துக்கு விரைந்து வந்தனர். அதுமட்டுமின்றி விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தங்களுடைய வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு ராஜாவின் தோட்டத்துக்கு வந்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள புதரில் புலி மறைந்திருந்ததை நேரில் கண்டதும் பொதுமக்கள் அனைவரும் பீதியில் உறைந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த ஜீர்ஹள்ளி வனச்சரகர் காண்டீபன், வனத்தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏராளமான பொதுமக்கள் புலியை வேடிக்கை பார்க்க கூடியதால், அந்த புலி தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு புதராக சென்று மறைந்து கொண்டது.

இதைத்தொடர்ந்து புலியை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட முடிவு செய்தனர். ஆனால் அருகில் ஏராளமான கரும்பு மற்றும் வாழைத்தோட்டங்கள் உள்ளன. எனவே வனப்பகுதிக்குள் செல்லாமல் தோட்டத்துக்குள் சென்று புலி பதுங்கி கொண்டால் அதை விரட்டுவது கடினமான காரியம் ஆகிவிடும் என வனத்துறையினர் கருதினர்.

இதனால் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் அசோகன் மாலை 5 மணிக்கு சிமிட்டஹள்ளி பகுதிக்கு வந்தார்.

அப்போது மழை பெய்ய தொடங்கியது. மேலும் இருட்டவும் தொடங்கிவிட்டது. இதனால் புதருக்குள் மறைந்திருந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே கூண்டு வைத்து புலியை பிடிக்கலாமா? என வனத்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள். மாலை 6 மணி வரை புலியை எப்படி பிடிப்பது என்பதில் வனத்துறையினர் குழப்பம் அடைந்த வண்ணம் இருந்தனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘தோட்டத்தில் உள்ள புதருக்குள் பதுங்கி இருக்கும் புலி உருவத்தில் பெரியதாக உள்ளது. இங்கிருந்து வனப்பகுதி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே வனப்பகுதிக்கு செல்லும் வழியில் பல்வேறு மலைக்கிராமங்கள், தோட்டங்கள் உள்ளன. எனவே புலியை விரட்டும்போது அது கிராமத்துக்குள்ளோ, தோட்டத்துக்குள்ளோ புகுந்து மறைந்து கொள்ளும். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படும். புலியை நேரில் கண்டதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். எனவே புலியை மயக்க ஊசி செலுத்தியோ? கூண்டு வைத்தோ? உடனடியாக பிடிக்க வேண்டும். இதில் வனத்துறையினர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது,’ என்றனர்.

மேலும் செய்திகள்