நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு வாய்ப்பு; தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்

நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-25 22:45 GMT

சிவகங்கை,

மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாநில அளவில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குப்படுத்தும் நோக்கத்திலும், அரசு நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம், முடித்திருத்துவோர் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நல வாரியம், பனைமரத் தொழிலாளர் நலவாரியம், காலனி, தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், ஓவியர் நலவாரியம், பொற்கொல்லர் நலவாரியம், மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், வீட்டுப்பணியாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம் உள்பட 17 நலவாரியங்களில் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

போதிய நிதி ஓதுக்கீடு கோரிப் பெறவும், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கிலும் உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அட்டை எண்ணையும் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தை சேர்ந்த, மேற்படி வாரியங்களில் பதிவு செய்து இதுவரை புதுப்பிக்காத தொழிலாளர்கள் மற்றும் ஆதார் எண் விவரத்தை தெரிவிக்காத தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதன்படி அவர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகலை இணைத்து 138, மதுரைரோடு, சர்ச் எதிரில் இயங்கி வரும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவித்து தாமதமின்றி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்