ராமநாதபுரம் நகரில் பேக்கரி மாஸ்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

ராமநாதபுரம் நகரில் பேக்கரி ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்துள்ளார்.

Update: 2019-05-25 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி எதிரில் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் திருச்சி மணப்பாறை இச்சடிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மகன் இளையராஜா(வயது27) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் வேலை முடிந்து மாடியில் உள்ள அறையில் உறங்க சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து மாடி பகுதியில் பயங்கர சத்தம் கேட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மேலே சென்று பார்த்துள்ளனர். அங்கு படுக்கையில் கழுத்தில் ரத்தம் வழிய இளையராஜா துடிதுடித்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து கழுத்தில் 20 தையல் போட்டு இளையராஜாவை காப்பாற்றினர். இந்த சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது கடையில் வேலை பார்த்த ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்களுர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் மேலே சென்றுள்ளது தெரியவந்தது. சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவான அவரை போலீசார் தேடிவிரைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக இளையராஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார், அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்