மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கர்நாடக பொது நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கர்நாடக பொது நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

Update: 2019-05-25 23:45 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங், பி.எஸ்.சி. உள்பட பல்வேறு பட்டபடிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மாநில உயர்கல்வித்துறை சார்பில் பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) நடத்தப்பட்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டுக்கான பொது நுழைவு தேர்வு கடந்த மாதம் (ஏப்ரல்) 29, 30-ந் தேதிகளில் நடந்தது.

இந்த நுழைவு தேர்வுக்கு 1.94 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்த நிலையில் 1,80,315 மாணவர்கள் எழுதினார்கள். இந்த நுழைவு தேர்வு முடிவு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக தேர்வுத்துறை அலுவலகத்தில் மாநில உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா காலை 11 மணிக்கு வெளியிட்டார். மதியம் 1 மணியளவில்kea.kar.nic.in, karresults.nic.in, cet.kar.nic.in ஆகிய இணையதளங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

பின்னர், மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறுகையில், ‘கர்நாடக பொது நுழைவு தேர்வை மாநிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த 431 மையங்களில் 1,80,315 மாணவர்கள் எழுதினார்கள். இதில், என்ஜினீயரிங் பிரிவில் 1,40,957 பேரும், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் பாடப்பிரிவில் 1,17,947 பேரும், பி.எஸ்.சி. (விவசாயம்) பிரிவில் 1,13,294 பேரும், கால்நடை அறிவியல் பிரிவில் 1,18,045 பேரும், பி.பார்ம் பிரிவில் 1,46,546 பேரும், டி.பார்ம் பிரிவில் 1,46,759 பேரும் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர்’ என்றார்.

குறிப்பாக, என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்த ஜீபீன் பாபு என்பவரும், யோகா பிரிவு மற்றும் கால்நடை அறிவியல் பிரிவில் பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்த மகேஷ் ஆனந்த் என்பவரும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர்.

பி.எஸ்.சி. (விவசாயம்) பிரிவில் பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த கீர்த்தனா எம்.அருண் என்ற மாணவியும், இளங்கலை மருந்தியல்(பி.பார்ம்) மற்றும் டிப்ளமோ மருந்தியல் (டி.பார்ம்) பிரிவில் ராமமூர்த்தி நகரை சேர்ந்த கே.சாய்சாகிதிக சிகூரி முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்