ஈரோட்டில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

ஈரோட்டில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-25 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது தாய்க்கு அறிமுகமான ஈரோடு மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த அப்துல் சலிம் (65) என்பவர் வீட்டிற்கு வந்தார். அவர், இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து கொண்டு அவரிடம் தகாத முறையில் பேசி உள்ளார். மேலும் அப்துல் சலிம் அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். அப்போது அப்துல் சலிம், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் அப்துல் சலிம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்துல் சலிம் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அப்துல் சலிமை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்