வெவ்வேறு விபத்துகளில் வேன்கள் கவிழ்ந்து 21 பேர் காயம்

வெவ்வேறு விபத்துகளில் வேன்கள் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-25 22:00 GMT
நாங்குநேரி, 

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலையில் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெருமாள்குளம் விலக்கில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்கள், பரப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணிமுத்தாறு அருவிக்கு மேல்பகுதியில் மாஞ்சோலையில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். தற்போது கோடை காலத்தை முன்னிட்டு, அங்கு தேயிலை உற்பத்தி குறைந்ததால், அந்த தொழிலாளர்களை வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.

இதற்காக நேற்று காலையில் மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் 2 வேன்களில் வால்பாறைக்கு புறப்பட்டனர். மாஞ்சோலை அருகே மூணுமுடங்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மற்றொரு வேனில் மாஞ்சோலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

மேலும் செய்திகள்