பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதிஉதவி பெற்று தருவதாக ரூ.1.90 லட்சம் மோசடி பெண் கைது

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதிஉதவி பெற்று தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-25 23:00 GMT

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வசந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்கண்ணன். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 40). இவர் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள பெண்களிடம் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நிதிஉதவி பெற்று தருவதாக பலரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முறிசி தாலுகா பிள்ளாபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் மனைவி நித்யா (32) என்பவரிடம் இந்த திட்டத்தில் வீடு கட்டுவதற்கு நிதிஉதவி பெற்று தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் நிதிஉதவியை பெற்று தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நித்யா நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கோதையை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், அவர் 5 பெண்களிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்