பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கோவை கோர்ட்டில் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. போலீசார் கோவை கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Update: 2019-05-24 23:30 GMT
கோவை, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக திருநாவுக்கரசு (வயது 26), சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24), மணிவண்ணன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அன்று மிரட்டி தாக்கியதாக, அவரது புகாரின் பேரில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மார்ச் 12-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 40 சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வழக்கின் அனைத்து ஆவணங்களும் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு கடந்த மாதம் 28-ந் தேதி சி.பி.ஐ. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்களிடம் வழக்கின் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன. அதன்பேரில் சி.பி.ஐ. போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலியல் சம்பவம் திட்டமிட்டு நடந்தது தெரிந்தது. இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் நேற்று முதல் கட்ட குற்றப்பத்திரிகையை கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் தாக்கல் செய்தனர். அதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை தொடங்கிய ஒரு மாதத்துக்குள் முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் அடுத்த இறுதி கட்ட குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்