வேலூரில் உள்ள பளுதூக்கும் விளையாட்டு மைய விடுதியில் சேர, மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆனந்த் தகவல்
வேலூரில் உள்ள பளுதூக்கும் விளையாட்டு மைய விடுதியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்,
தமிழக அரசு விளையாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நடப்பு ஆண்டிற்கு பளுதூக்கும் விளையாட்டிற்கு 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு கல்லூரியில் பயில உள்ள பளுதூக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலூர் சத்துவாச்சாரியில் முதன்மை நிலைய பளுதூக்கும் விளையாட்டு மைய விடுதி தொடங்கப்பட உள்ளது.
இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பளுதூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு கல்லூரிகளில் பயில உள்ள பளுதூக்கும் திறமைக்க மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப படிவம் 18-ந் தேதி முதல் “ www.sdat.tn.gov.in” என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். முதன்மை நிலை விளையாட்டு விடுதி தொடர்பான விவரங்களை “ www.sdat.tn.gov.in ” என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேற்படி தேர்வுகளுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.