களியக்காவிளை அருகே, தீயில் கருகி சிறுமி சாவு - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

களியக்காவிளை அருகே 13 வயது சிறுமி தீயில் கருகி இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-24 22:30 GMT
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள பகுதியான அயிரயை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மனைவி சவுமியா, பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் அஞ்சனா (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனோஜ் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு, சவுமியா, சஜீவ்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் சிறுமி அஞ்சனாவும் வசித்து வந்தார். இந்தநிலையில், தாய் சவுமியா தனது 2-வது கணவருடன் சேர்ந்து சிறுமியை அடித்து கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அஞ்சனா திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி அஞ்சனாவை தேடி கண்டு பிடித்தனர்.

அப்போது, தாயின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக அஞ்சனா தெரிவித்தாள். தொடர்ந்து அதிகாரிகள், சவுமியாவை எச்சரித்து அவருடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சவுமியாவும், அவரது கணவனும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அஞ்சனா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடலில் தீ எரிந்த நிலையில் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் சாவுக்கான காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது, தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்