பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ள கடலோர போலீஸ் நிலையத்திற்கு போதிய அளவில் போலீசாரை நியமித்து, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழமண்டல கடற்கரை ஒட்டி 44 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பழவேற்காடு ஏரியை சுற்றி மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வங்கக்கடலும், பழவேற்காடு ஏரியும் இந்த முகத்துவாரப் பகுதியில் இணைந்துள்ளதால் மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு எளிதாக சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இதனை அடுத்து வங்கக்கடல் எல்லையில் ஆந்திர பிரதேசத்தின் பகுதியும் இணைந்து உள்ளதால் தமிழக கடலோர காவல்படையினர் பழவேற்காடு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பகுதிகளில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடலோர பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய போலீஸ் நிலைய கட்டிடங்களை கட்டினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசின் உள் மதுவிலக்கு ஆயத்துறை சார்பில் பழவேற்காடு ஏரிக்கரை மீன்பிடித் துறைமுகத்தின் அருகில் ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலோர போலீஸ் நிலையத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த போலீஸ் நிலையத்தில் தற்போது 2 போலீசார்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்நிலையில் பழவேற்காடு ஏரியில் இருந்து அரிய வகை உயிரினமாகவும், மீன்களின் நண்பனாக உள்ள ‘பாலீகிட்ஸ்’ என்னும் சிவப்பு நிறம் கொண்ட புழுக்களை வெட்டி எடுத்து ஆந்திராவுக்கு கடத்தும் சிலர், அங்குள்ள இறால் பண்ணைகளுக்கும் தீவனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பழவேற்காடு ஏரியின் வழியாக படகு மூலம் ஆந்திர மாநிலத்திற்கு மாதந்தோறும் 40 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் வங்கக்கடலின் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் கிளிஞ்சல்கள் எடுத்து சுண்ணாம்பு தயாரிக்க கனிமவள உரிமங்கள் இல்லாமல் ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்தல் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு இப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டபோது தேர்தல் பறக்கும் படையால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சமூக விரோத செயல்கள் இப்பகுதியில் நடப்பது வாடிக்கையாடி விட்டது..
எனவே, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடலோர போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் என கூடுதலாக போதிய போலீசாரை நியமனம் செய்து சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.