சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-05-24 23:00 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தனித்தாலுகா அந்தஸ்து பெற்று சுமார் 4 வருடங்கள் ஆகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனை 1970–ல் கட்டப்பட்டு பிறகு 2000–ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதில் நோய்களுக்கென தனித்தனி பிரிவு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இங்கு நோய்களை கண்டறியும் அதி நவீன சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைக்கு சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள 30 ஊரட்சிக்குட்பட்ட கிராமத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் வெளிநோயாளிகளாக தினமும் 500 முதல் 700 பேர் வரை சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் தற்போது பல மாதங்களாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது. (7 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 2 டாக்டர்களே உள்ளனர்.) இருக்கும் டாக்டர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் மாற்று பணியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

குறிப்பாக நோயாளிகள் அதிகம் வராத பூலான்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் மாற்றப்படும் போது, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அறவே இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் மாதந்தோறும் சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50–க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் பார்க்கப்பட்டன.

தற்போது இங்கு நர்சுகள் பணிக்கு அமர்த்தப்படாமலும், பிரசவ படிப்புக்கான பயிற்சி டாக்டர்களும் இல்லாத நிலையில் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை. மேலும் கடந்த 5 வருடங்களாக ஒரு மருந்தாளுனர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:– இந்த மருத்துவமனையில் எப்போதாவது இருக்கும் ஆண் டாக்டர்களிடம், அந்த சமயத்தில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் கூச்சப்பட்டு வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

இங்கு பல்வேறு சிகிச்சைக்காக பல நவீன சாதனங்கள் இருந்தும், அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் துப்புரவு பணி பாதிக்கப்பட்டு, சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

நோயாளிகள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பழுதாகியும், உணவு தயார் செய்யும் இடமும், சமையலர் பணியிடமும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக காலியாக உள்ளன. முக்கியமாக மருத்துவமனையின் பிரதான வாயிலில் வைக்கப்படும் போர்டு காம்பவுண்டு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்