அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்தார் செந்தில்பாலாஜி

கோர்ட்டு உத்தரவினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தக்க வைத்து, 38,090 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Update: 2019-05-24 22:15 GMT
கரூர், 

தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. இவர், கடந்த 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பத்தால் டி.டி.வி.தினகரனை அவர் ஆதரித்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்களும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி போட்டியிட்டார். 2011-ம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட வி.வி.செந்தில்நாதன் என்பவர் மீண்டும் அங்கு களத்தில் இறக்கப்பட்டார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மொத்தம் 63 வேட்பாளர்கள் அரவக்குறிச்சியில் போட்டியிட்டனர். அரவக் குறிச்சியில் 99,052 ஆண் வாக்காளர்கள், 1,06,219 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 2 என மொத்தம் 2,05,273 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த தேர்தலில் 1,73,115 பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், சுதந்திரத்திற்கு பிறகு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருந்தது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 5 முறையும், தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் மற்றும் சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

1980-ல் இருந்து அந்த நிலைமை மாறி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக அரவக்குறிச்சியில் யாராலும் வெற்றிக்கனியை எட்ட முடியாத நிலை இருந்தது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அரவக்குறிச்சியில் வெற்றி யாருக்கு வரும்? என எதிர்பார்த்தனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் கரூர் அருகே தளவாபாளையத்திலுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடக்கம் முதலே அடுத்தடுத்த சுற்றுகளிலும், தபால் வாக்கிலும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். இதனால் சோர்வடைந்த அ.தி.மு.க.வினர் மதியத்துக்கு மேல் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற தொடங்கியதை காண முடிந்தது. முடிவில் 18 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் செந்தில்பாலாஜி முன்னிலை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வி.செந்தில்நாதனை விட 38,090 வாக்குகள் அதிகம் பெற்றார். செந்தில்பாலாஜி 98,154 வாக்குகளும், செந்தில்நாதன் 60,064 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2006, 20011 மற்றும் 2016 தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது 4-வது முறையும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தோல்வியை தழுவிய நிலையில், செந்தில்பாலாஜி மட்டும் அதற்கு விதிவிலக்காக வெற்றி பெற்றிருப்பது தி.மு.க.வுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் தகுதி நீக்கத்துக்கு இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தளவா பாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை செந்தில்பாலாஜி பெற்றார். பின்னர் அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த செந்தில்பாலாஜி கரூர் மனோகரா கார்னர் அண்ணா சிலை உள்பட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு நள்ளிரவில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தி.மு.க.வினர் வெற்றியை கொண் டாடினர்.

மேலும் செய்திகள்