லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரை விசாரணைக்காக அழைத்து சென்ற ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் அவர் மீது லாட்டரிசீட்டு விற்பனை வழக்கு போடுவதாகவும், வழக்கு போடாமல் இருக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறும் கேட்டார்.
இந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத சரவணன், கடந்த 22–ந் தேதி கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி சரவணன் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் நடராஜனை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.