வறட்சியின் பிடியில் கொய்யா மரங்கள் - விவசாயிகள் கவலை
சத்திரப்பட்டி பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கொய்யா மரங்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகாவில் சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி சாகுபடிக்கு அடுத்ததாக கொய்யா விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டினம்புதூர், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம் போன்ற கிராமங்களில் கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கு விளையும் கொய்யா காய்கள் பறிக்கப்பட்டு பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள சந்தைக்கு விற்பனைக் காக கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அங்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பருவமழை பொய்த்து போனதால் சத்திரப்பட்டி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிணறுகளின் நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. கிணறுகளில் இருந்து கிடைக்கிற குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசன முறையில் கொய்யா மரங்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
இருப்பினும் தற்போது நிலவும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கொய்யா செடிகள், மரங்கள் கருகி வருகின்றன. மேலும் சில இடங்களில் அதிக வெப்பம் காரணமாக மரத்தில் இருந்து பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
கொய்யாவுக்கு போதிய விலை இன்மை, வியாபாரிகளின் தலையீடு உள்ளிட்ட காரணத்தினால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது மரங்களும் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வறட்சியால் கருகிய கொய்யா மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.