மணல் கடத்தியதாக பிடிபட்ட வாலிபரை விடுவிக்க கோரி, போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை - விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே மணல் கடத்தியதாக கூறி, பிடிபட்ட வாலிபரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-05-22 22:15 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை காந்தி (வயது 30). இவர் நேற்று முன்தினம் மாலையில், அங்குள்ள மணிமுக்தாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டைகளில் மணல் கடத்தியதாக கூறி அவரை கருவேப்பிலங்குறிச்சி போலீசார், போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த நேமம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் இரவில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு ஒன்று திரண்டு வந்து திடீரென முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்த வில்லை என்று கூறி, தில்லைகாந்தி வீடியோ ஒன்றில் பேசி அதை வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.

இதன் காரணமாக தில்லை காந்தியை பழிவாங்கும் வகையில், அவரை மணல் கடத்தியதாக கூறி பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் திட்டமிடுவதாக கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் போலீசாரை கண்டித்தும், தில்லைகாந்தியை உடனடியாக விடுவிக்க கோரியும் கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

அப்போது போலீசார், மோட்டார் சைக்கிள் மூலம் அவர் மணல் கடத்தியுள்ளார், எனவே அவரை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியை கடந்தும் இவர்களது போராட்டம் நீடித்தது. இதுபற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தில்லைகாந்தியை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்