ராஜீவ்காந்தி பற்றி மோடி மோசமாக விமர்சித்தார் : துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றச்சாட்டு
ராஜீவ்காந்தி பற்றி பிரதமர் நரேந்திர மோடி மிக மோசமாக விமர்சித்ததாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்ச்சி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பரமேஸ்வர் பேசும்போது கூறியதாவது:-
இளைஞர்களின் சக்தியை புரிந்துகொண்ட ராஜீவ்காந்தி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு வாக்குரிமையை கொடுத்தார். ஆனால் பிரதமர் மோடி, இதை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
நமது கட்சியின் நிர்வாகிகள், இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மோடி எதையும் செய்யவில்ைல என்பதை புரிய வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில், ராஜீவ்காந்தி பற்றி மோடி மிக மோசமாக விமர்சித்தார்.
அவர் தனது சாதனையை மக்களிடம் கூற வேண்டும். அதைவிடுத்து ராஜீவ்காந்தி பற்றி தவறாக பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “ராஜீவ்காந்தி யாரையெல்லாம் நம்பினாரோ? அவர்களே அவருடைய முதுகில் குத்திவிட்டனர்.
இதனால் அவர் ஒரு முறை தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நாங்கள் நம்பவில்லை. யாரும் நம்ப மாட்டார்கள்.
தொண்டர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது. தேர்தல் முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்” என்றார்.