பவளப்பாறைகள் விற்கப்படுவதாக புகார், கூடலூர் கடையில் வனத்துறையினர் சோதனை - 40 கற்களை பறிமுதல் செய்து விசாரணை

பவளப்பாறைகள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் கூடலூரில் வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 40 கற்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-21 22:30 GMT
கூடலூர்,

கூடலூரில் வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதையொட்டி வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் அந்த கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கண்ணாடி பெட்டிகளுக்கு உள்ளே அழகுக்காக வைக்கப்படும் கற்கள் இருப்பதை கண்டனர்.

பின்னர் அதை பரிசோதித்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடை உரிமையாளர் சாதாரண சிமெண்டு மூலம் தயாரித்த கற்கள் எனவும், சென்னையில் ஒரு கடையில் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். இருப்பினும் விற்பனைக்காக வைத்திருந்த 40 கற்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கூடலூர் நீதிமன்றத்தில் அந்த கற்களை சமர்ப்பித்தனர். தொடர்ந்து வனத்துறையிடம் கற்கள் திரும்ப வழங்கப்பட்டது. இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:- பவளப்பாறைகள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனால் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தபோது 40 கற்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது பவளப்பாறைகள் போல் தெரியவில்லை.

தொழில்போட்டியின் காரணமாக தவறான புகார் கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அல்லது கோவைக்கு சில கற்கள் அனுப்பி வைக்கப்படும். அதன் அறிக்கையின்படி உண்மை தன்மை அறிந்த பிறகு கடை உரிமையாளரிடம் கற்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்