காளையார்கோவில்-நாட்டரசன்கோட்டையில், வைகாசி திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு
காளையார்கோவில் மற்றும் நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவிலில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குபட்ட சோமேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று காளையார்கோவில்-பரமக்குடி சாலையில் உள்ள அய்யனார் கோவில் பொட்டலில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 16 காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒரு காளையை மடக்க 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு அதை மடக்க 9 பேர் கொண்ட வீரர்கள் குழு களத்தில் இறங்கினர்.
போட்டியில் சில காளைகள் வீரர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்தன. சில காளைகள் வீரர்களை முட்டி தூக்கி எறிந்தன. சில காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சையளித்தனர். இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியையொட்டி தேவையான அடிப்படை வசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை காளையார்கோவில் பகுதி மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. போட்டியில் ஒரு காளையை மடக்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு அதை மடக்க 9 பேர் கொண்ட வீரர்கள் களத்தில் இறங்கினர்.
இந்த போட்டியில் குறிப்பிட்ட நிமிடத்தில் காளையை அடக்கினால் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அந்த நிமிடத்திற்குள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் காளையை அடக்க முயன்ற 8 வீரர்கள் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மறவமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோர் சிகிச்சையளித்தனர்.
எஸ்.புதூர் அருகே உள்ள பழைய நெடுவயல் ஆதினமிளகி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முதலில் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நெடுவயல் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உலகம்பட்டி போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அந்த பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, அழகு, பழனி, ராசு, முகமதுகாசி, மாடுகளை அவிழ்த்து விட்டதாக அய்யாவு, நல்லான், முருகன், குமார், பழனிச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.