நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு பொய்த்து போகும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பொய்த்து போகும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன் நினைவாக ஆண்டுதோறும் கர்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதுச்சேரி வழியாக ஸ்ரீபெரும்புதூரை சென்றடைவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை கடந்த 15-ந் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. ஐ.என்.டி.யு.சி. தலைவர் பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியை அடைந்தது. இந்திரா காந்தி சிலை அருகே நினைவு ஜோதிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவு ஜோதி தனியார் திருமண நிலையத்தில் வைக்கப்பட்டது.
நேற்று காலை புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஜோதி மாமல்லபுரம் வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீபெரும்புதூரை சென்றடைகிறது.
இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர் ராஜீவ்காந்தி. அவர் இருந்திருந்தால் நாடு மேலும் பல வளர்ச்சிகளை அடைந்திருக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நாளை (இன்று) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் அமைதி ஊர்வலத்தில் புதுவை மாநில காங்கிரசார் பங்கேற்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக 5 முதல் 6 லட்சம் பேரிடம் கருத்துகள் பெறப்பட்டிருக்கும். ஆனால் நாட்டில் உள்ள 80 கோடி வாக்காளர்களின் கருத்துக்களை கேட்டுவிட முடியாது. வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வருவார் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியை தழுவினார். 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் தோல்வி அடைவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரானார். எனவே கருத்துக்கணிப்புகளை வைத்து முடிவை சொல்லிவிட இயலாது. அதன்படி இம்முறை வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு பொய்த்து போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.