வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அமைத்தது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-05-20 23:30 GMT
திருப்பூர்,

உள்ளாட்சி தேர்தல்-2019, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அமைத்தது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டது. அதற்குரிய விளக்கத்தையும் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு எடுத்து கூறினார். மேலும், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித்தேர்தல்) முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்