அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Update: 2019-05-20 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மொத்தல் 84.33 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட எந்திரங்களின் விவரங்கள் முறையாக கணினியில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று அரவக்குறிச்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விவரம் குறித்தும், பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன், தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீஹரி பிரதாப் சாஹி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதில் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்திரை மற்றும் வேட்பாளர்களின் முத்திரை கொண்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் துணை ராணுவபடையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி சி.சி.டி.வி. கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

‘சீல்’ வைக்கப்பட்டபோது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, அரவக்குறிச்சி சட்டமன்றதொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஈஸ்வரன், வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் இருந்தனர். 

மேலும் செய்திகள்