மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் விபத்து, அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி - மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் குன்னூரை சேர்ந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). கூலி வேலை பார்த்து வந்தார். இவர் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தின் உதவியுடன் மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார். இதற்கான தவணை தொகையை செலுத்துவதற்காக நேற்று மதியம் மேட்டுப்பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது அவருடன் தனது நண்பரான மதுரை வீரன் டி.டி.கே.ரோட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் (18) என்பவரையும் அழைத்து சென்றார். இவர்கள் மேட்டுப்பாளையத்திற்கு வந்து நிதி நிறுவனத்தில் தவணை தொகையை செலுத்திவிட்டு மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.